சேலம்: இரு கடைகளின் பூட்டுகளை உடைத்து, 35 ஆயிரம் ரூபாய் திருடியவர்களை, போலீசார் தேடுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42. இவர், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, காந்தி சிலை முன் அரிசி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம், அவர் கடையை பூட்டிச்சென்ற நிலையில், நள்ளிரவில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, 20 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர். அவர் புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், சேலம், ஐந்து ரோடு, அப்பல்லோ மருந்து கடையின் பூட்டையும், நள்ளிரவில் உடைத்து, உள்ளே சென்ற கொள்ளையர்கள், 15 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர். கடை மேலாளர் ரமேஷ்குமார், 38, புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இரு சம்பவங்களிலும், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பதை, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும், அவர்களை பிடிக்க, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.