வீரபாண்டி: மயான வசதி இல்லாததால், திருமணிமுத்தாற்றில் சடலங்களை புதைத்து வருகின்றனர். வீரபாண்டி, அக்கரபாளையம் ஊராட்சி, பாலம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களில் யாரேனும் இறந்தால், அருகேவுள்ள திருமணிமுத்தாற்றின் கரையில், சடலங்களை எரித்தோ, புதைத்தோ வருகின்றனர். தற்போது, 100க்கும் மேற்பட்ட சமாதிகள் உள்ள நிலையில், மேற்கொண்டு புதைக்க இடம் இல்லை. இதனால், பழைய சமாதிகளை, பள்ளம் தோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, சடலங்களை புதைக்க முடியாமல் தவிக்கின்றனர். ஏற்கனவே, மக்கள், மயான வசதி கேட்டு, அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை பலனில்லை. திருமணிமுத்தாற்றை தூர்வாரும்போது, கரையோரம் புதைக்கப்பட்டுள்ளவர்களின் சமாதிகளை அகற்றிவிடுவர். அதனால், பாலம்பட்டிக்கு மயான வசதி ஏற்படுத்தி தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.