காரிமங்கலம்: சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற, தர்மபுரி மாவட்ட பா.ம.க.,வினர் காரிமங்கலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வன்னியர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில், பா.ம.க., சார்பாக தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பா.ம.க.,வினர், 10க்கும் மேற்பட்ட வாகனங்களில், மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில், நேற்று காலை காரிமங்கலம் வழியாக சென்னைக்கு சென்றனர். அவர்களை, டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார், அகரம் கூட்டுரோட்டில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து, பா.ம.க.,வினர், தேசிய நான்கு வழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசாருக்கும், பா.ம.க.,வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில், பா.ம.க.,வினரை சென்னைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்த மறியலால் காரிமங்கலம்- பெங்களூர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.