தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை, 6,057 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 5,875 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 319 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 8,360 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 773 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மழை பெய்வதால், கொசுவால் பரவும் நோய்கள், குறிப்பாக, டெங்கு காய்ச்சல் கொசுப்புழு உருவாகாமல் தடுக்க வேண்டும். தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஊரக வளர்ச்சி, டவுன் பஞ். மற்றும் நகராட்சியினர் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, இணை இயக்குனர் திலகம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) இளங்கோவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.