தர்மபுரி: தீபாவளி சீட்டு நடத்தி, 30 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், உரிய விசாரணை நடத்தாத எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 30. இவர், அப்பகுதியில் டியூசன் சென்டர் நடத்தியபோது, மாணவியரை, ஆபாசமாக வீடியோ எடுத்தது தொடர்பாக, போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த அவர், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டியில் வசித்து வந்தார். அங்கு, தீபாவளி சீட்டு நடத்தினார். அதில் சேர்ந்து, பணம் செலுத்திய, 200க்கும் மேற்பட்டோருக்கு, அவர், 30 லட்சம் ரூபாய் வரை தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த, தனியார் கல்லூரி ஆசிரியர் விஸ்வநாதன், 35 புகாரின்படி, அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை எஸ்.ஐ., பார்த்திபன், உரிய விசாரணை நடத்தாதது தெரியவந்தது. இதையடுத்து, அவரை, தர்மபுரி ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமார் உத்தரவிட்டார். மேலும், பண மோசடி செய்த சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.