ஓசூர்: கெலமங்கலத்தில், சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்ல, பாலம் அமைக்க பூமிபூஜை நடந்தது. கெலமங்கலத்தில் இருந்து பாரந்தூர் செல்லும் சாலையில், மின்வாரிய அலுவலகம் எதிரே, சாலையின் குறுக்கே கழிவுநீர் சென்று வந்தது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர். கழிவுநீர் செல்லும் வகையில், சாலையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பா.ஜ., சார்பில், பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டமும் நடந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்ட, 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கெலமங்கலம் டவுன் பஞ்., முன்னாள் தலைவர் சையத் அசைன் தலைமையில் பூமிபூஜை நடந்தது. எச்.செட்டிப்பள்ளி பஞ்., தலைவர் மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.