திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின் போதும், தை மாதம், பொங்கல் திருவிழாவின் திருவூடல் நிகழ்வின்போதும், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், நேற்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஐந்தாம் பிரகாரத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து நேற்றிரவு, கோவில் வளாகத்தில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பம் உற்சவம் நடந்தது. பராசக்தி அம்மன் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.