ஈரோடு: ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும்,'' என, கனிமொழி எம்.பி., கூறினார்.
தி.மு.க., மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி, ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: தெலங்கானா, புதுவை மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல முடக்குவாதத்தால் பாதித்தவர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அவர்களிடம் கனிமொழி பேசும்போது, ''மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உங்களின் உணர்வுகளை உணர்ந்தவராக ஸ்டாலின், முதல்வரான பின் செயல்படுவார். இந்த ஆட்சியில் மறுக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்படும்,'' என்றார்.
விசைத்தறி சங்க கூட்டமைப்பு மனு: தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில செய்தி தொடர்பாளர் கந்தவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், கனிமொழியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் உள்ளது. 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஆறு லட்சத்துக்கும் மேல் விசைத்தறிகள் இயங்கும் நிலையில். 10 லட்சம் பேர் நேரடியாக, ஐந்து லட்சம் பேர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர். சில ஆண்டுகளாக விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. விசைத்தறிக்கு, மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் மின் திட்டத்தில், விலக்கு அளிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை உற்பத்தி செய்ய வேண்டும். விசைத்தறி மேம்பாட்டுக்கு மானிய கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கொதிப்பு: ஐ-பேக் நிறுவன ஆலோசனைப்படி, கனிமொழி சுற்றுபயணம் அமைந்ததாக, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஐ-பேக் நிறுவனத்தினர், ஆலோசனைப்படியே கனிமொழி சுற்றுப்பயண திட்டம் அமைந்தது. தி.மு.க., ஓட்டு வங்கி உள்ள இடங்களில், கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வைக்க, கிளை, நகரம், ஒன்றியம், மாவட்ட, மாநில நிர்வாகிகள் முயன்றனர். இந்த ஐடியாவை ஐ-பேக் நிர்வாகிகள் நிராகரித்ததால், கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். இதனால் மக்கள் சந்திப்பும் குறைந்து, தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், நினைவு இல்லத்தை பார்ப்பது போன்ற பணியில், கனிமொழி பிரதானமாக ஈடுபட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.