ஈரோடு: ''தேர்தலில் பங்களிப்பு, புதிய கட்சி துவங்குவது குறித்து, அழகிரி தெரிவித்திருப்பது அவரது சொந்த கருத்து,'' என, தி.மு.க., மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி கூறினார்.
ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈ.வே.ராமசாமி கொள்கைகளுக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது முடிவுக்கு வர வேண்டும் என்பதில், மக்கள் தெளிவாக உள்ளனர். தி.மு.க.,வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்த பின், கருத்து இருந்தால் கூறுகிறேன். இட ஒதுக்கீட்டை, கையில் எடுத்து தேர்தலுக்கான அரசியல் நாடகத்தை, பா.ம.க., நடத்தி வருகிறது. மாவட்டம் வாரியாக கருத்துகளை பெற்ற பிறகு, தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேர்தலில் தன் பங்களிப்பு, புதிய கட்சி துவங்குவது குறித்து, அழகிரி தெரிவித்தது அவரது சொந்த கருத்து. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அரசியலில் ஈடுபடலாம். பா.ஜ., சமூக நீதிக்காக என்ன செய்தது. சமூக நீதிக்காக, தி.மு.க., போராடி கொண்டிருக்கிறது. எங்களை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை. விவசாயிகள் போராட்டம் குறித்து, தெளிவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். இதுதான், தி.மு.க., நிலைப்பாடு. திராவிடத்தையும், சுயமரியாதை உணர்வையும் யாரும் வீழ்த்தி விட முடியாது. கருணாநிதி படத்தை கூட, ஈ.வே.ராமசாமி நினைவகத்தில் இருந்து அகற்றி உள்ளனர். அந்த அளவுக்கு, அ.தி.மு.க., சுயமரியாதையை இழந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.