ஓசூர்: தளி அருகே உள்ள, கொய்மலர் மகத்துவ மையத்தை, ஆய்வு செய்த இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள், இதுவரை மொத்தம், 7,455 விவசாயிகளுக்கு, பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, இந்தியா, இஸ்ரேல் நாடுகளின் கூட்டு முயற்சியில், 57 ஏக்கரில், கொய்மலர் மகத்துவ மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு, நவீன தொழில்நுட்பத்தில், சிக்கனமாக நீர், உரத்தை பயன்படுத்தி சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை, இந்தியாவுக்கான, இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனதன் ஜட்கா, துணை தூதர் ஏரியல் சீட்மேன், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அம்மையத்தில் சாகுபடி செய்த, ஹெலிகோனியா, அந்தூரியம், ஆர்க்கிட்ஸ் வெள்ளை உள்ளிட்ட பல்வேறு மலர்களை பார்வையிட்டனர். பின், பசுமை குடில்களில், கார்னேசன் மலர் செடி நடவு பணிகளை துவங்கி வைத்தனர்.
இது குறித்து, இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனதன் ஜட்கா நிருபர்களிடம் கூறுகையில், ''இம்மையத்தில், கொய்மலர்கள் சாகுபடியில், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க, அனைத்து உயர் தொழில்நுட்பங்களையும் செயல்விளக்க மையம் அமைத்து, விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை கள அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை மொத்தம், 7,455 விவசாயிகள், வங்கி உயர் அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர், உயர் தொழில்நுட்ப முறையில் பயிற்சி பெற்றுள்ளனர்,'' என்றார்.