கிருஷ்ணகிரி: நிலத்தகராறில் மனமுடைந்து, கலெக்டர் அலுவலகம் வந்த பெண், மண்ணெண்ணெய் குடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, ஜெகினிகொல்லையை சேர்ந்தவர் சின்னதாய், 44; நேற்று காலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அவர், தான் பாட்டிலில் கொண்ட வந்த மண்ணெண்ணெய்யை குடித்துள்ளார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து, விசாரித்தனர். அப்போது, போலீசாரிடம் அவர் கூறியதாவது: கடந்த, 2009ல் வசந்தா, கோவிந்தன் என்பவர்களிடம், 74.5 சென்ட் நிலத்தை வாங்கினோம். தற்போது, ஊரிலுள்ள சிலர் அதை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். எட்டு முறை கட்டப்பஞ்சாயத்து செய்து, எங்களை அவமானப்படுத்தினர். மூன்று முறை சொத்தை அளந்து காட்டியும், அரை சென்ட் நிலம் எங்களுக்கு சேர வேண்டும் என, ராஜா, அபிமன்னன் ஆகியோர் தொந்தரவு செய்து மன உளைச்சல் உண்டாக்கினர். மனமுடைந்தால், தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு, கலெக்டர் அலுவலகம் வந்தேன். இவ்வாறு அவர்கூறினார். இதைக்கேட்ட போலீசார், உரிய நட வடிக்கை எடுப்பதாக கூறி, அவரை, 108 அவசர கால ஆம்புலன்ஸில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.