சேலம்: திருமண சீசனால் பாக்கு தேவை அதிகரித்த நிலையில், வரத்து சரிந்து, அதன் விலை, கிலோ, 1,000 ரூபாய் வரை விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதிகளில் விளைவிக்கப்படும் பாக்குகளை, விவசாயிகள், சேலம், செவ்வாய்ப்பேட்டை, பால்மார்க்கெட்டில், செவ்வாய் சந்தைக்கு கொண்டு வந்து விற்கின்றனர். பாக்கு சீசன் ஆகஸ்டில் தொடங்கி, நவம்பரில் முடியும். தற்போது, சீசன் முடிந்த நிலையில், விலை உயர்வை எதிர்பார்த்து, விவசாயிகள், வியாபாரிகள் பாக்கை இருப்பு வைத்து வருகின்றனர். திருமண சீசனால், அதன் தேவை அதிகரித்த நிலையில், வரத்து சரிவால், நேற்று, பாக்கு விலை, கிலோவுக்கு, 50 முதல், 100 ரூபாய் வரை, விலை சரிந்தது. அதன்படி, கடந்த வாரம், பாக்கு முதல் தரம், கிலோ, 650க்கு விற்றது, 750 ரூபாய், இரண்டாம் தரம், 600க்கு விற்றது, 700 ரூபாய், மூன்றாம் தரம், 550க்கு விற்றது, 600 ரூபாயாக உயர்ந்தது. தூள் பாக்கு முதல் தரம் கிலோ, 850க்கு விற்றது, 1,000 ரூபாய், இரண்டாம் தரம், 750க்கு விற்றது, 930 ரூபாயாக உயர்ந்தது. இதனால், இருப்பு வைத்த வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, பால்மார்க்கெட் பாக்கு வியாபாரி சேகர் கூறுகையில், ''பிரபல வாசனை பாக்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயிகள், வியாபாரிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதனால், பாக்கு வரத்து சரிந்து, விலை உயர்ந்தது,'' என்றார்.