சேலம்: 'தங்கம் விலை கடந்த, 20 நாட்களில் பவுனுக்கு, 6,120 ரூபாய் சரிந்த போதும், மீண்டும் விலை உயரும்' என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கடந்த நவ.,12ல் ஆபரண தங்கம் கிராம், 5,250 ரூபாய்க்கும், பவுன், 42,000 ரூபாய்க்கு விற்று புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர், கொரோனா ஊரடங்கு படிப்படியாக விலகிய நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு குறையத் துவங்கியதால், சர்வதேச சந்தையில் அதன் விலை சரிந்தது. அதன் காரணமாக, கடந்த, 20 நாட்களில் படிப்படியாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. நவ.,12 துவங்கி நேற்று வரை கிராமுக்கு, 765 ரூபாயும், பவுனுக்கு, 6,120 ரூபாயும் சரிவு ஏற்பட்டு, நேற்று மதியம் கிராம், 4,485 ரூபாய்க்கும் பவுன், 35,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
இது குறித்து தமிழக தங்கம் வெள்ளி வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அவுன்ஸ் (31.1 கிராம்) 1,980 டாலர் வரை விற்றதால், தமிழகத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. தற்போது படிப்படியாக சரிந்து, நேற்று, 1,780 டாலராக சரிந்துள்ளது. அதே நேரத்தில் இந்திய ரூபாய்க்கு இணையான அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் குறைய துவங்கி உள்ளது. கொரோனா ஊரடங்கு முழுமையாக விலக்கப்படாததால், தங்கம் விலை மீண்டும் உயரவே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளி விலையும் சரிவு; தமிழகத்தில் கடந்த நவ.,12ல் வெள்ளி கிராம், 79 ரூபாய்க்கும், கிலோ, 74,000 ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை சரிவுகாரணமாக, வெள்ளி விலை, கடந்த, 20 நாட்களில் கிராமுக்கு, 14.70 ரூபாயும், கிலோவுக்கு, 14 ரூபாய் சரிந்து நேற்று, 60,000 ரூபாய்க்கு விற்பனையானது.