பல்லடம்:பல்லடம் தாலுகா அலுவலகத்தில் துருப்பிடித்து கிடந்த அரசு வாகனத்தை, லாரி உரிமையாளர் ஒருவர் நண்பருடன் சுத்தம் செய்தார்.
நேற்று மாலை, 4:00 மணி. பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு, பக்கெட், மக் சகிதமாக ஒருவர் வந்தார். யாரையும் எதிர்பார்க்காமல், மடமடவென, துருப்பிடித்து, குப்பை சகிதமாக இருந்த அரசு ஜீப்பை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.அவர் பெயர், கனகராஜ், 55. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர். இவர், பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன், லாரி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த, நவ., 22ல், 'தினமலர்' திருப்பூர் நாளிதழில், 'காயலான் கடைக்கு செல்ல காத்திருக்கும் அரசு வாகனம்' என்ற தலைப்பில், செய்தி பிரசுரிக்கப்பட்டது.
அதைப்படித்து, ஆதங்கப்பட்ட கனகராஜ், 'அரசு வாகனத்தை, தனது நண்பருடன் சேர்ந்து சுத்தம் செய்ய வந்தது தெரிந்தது.கனகராஜ் கூறுகையில், ''மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் ஜீப்பை சுத்தம் செய்தேன். பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று பயன்படாத வாகனங்கள் ஏராளமாக கிடக்கின்றன. அவற்றை பயன்படுத்தவோ, அல்லது ஏலத்துக்கு விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தாசில்தார் தேவராஜிடம் கேட்டதற்கு, ''அந்த ஜீப் பழுதடைந்துள்ளது. சரி செய்ய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.