நாமக்கல்: 'எட்டு மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் சிவநாதன் தலைமையிலான நிர்வாகிகள், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும், கடந்த, எட்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால், எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களில் பலர், மாற்றுப்பணியை தேடி அலையும் அவலம் உருவாகியுள்ளது. எங்களின் நிலையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், கோரிக்கையை தெரிவிக்கிறோம். கடந்த, எட்டு மாதங்களாக ஊதியம் இன்றி தவிக்கும் எங்களுக்கு, நிவாரணத் தொகை, தமிழக முதல்வரால் பரிசீலிக்கப்பட்டு வழங்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, நலவாரியம் அமைக்க, பரிசீலனை செய்ய வேண்டும். கல்வியாளர்களை கொண்டு, குழு அமைத்து, ஊதிய வரன்முறை நிர்ணயம் செய்து, அரசிதழில் வெளியிட்டு, பள்ளி நிர்வாகங்கள் அவற்றை, இ.சி.எஸ்., முறையில் வழங்குவதை, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.