பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள், இந்தாண்டு கூடுதல் விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்பட பல பொருட்களுடன், கூடுதலாக கரும்பும் வழங்கப்படுகிறது. இதனால், கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிபாளையம் அடுத்த சமயசங்கிலி, கரமேடு, தொட்டிபாளையம், பேரேஜ பகுதி, ஆவத்திபாளையம், கணபதிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள், பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில், கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டை விட, இந்தாண்டு, 250 ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அறுவடை துவங்க வாய்ப்புள்ளது. சாகுபடி அதிகரித்துள்ளதால், இந்தாண்டு கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.