குமாரபாளையம்: குமாரபாளையத்தில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குமாரபாளையத்தில் அம்மன் நகர் சாலையை சீர்படுத்த வேண்டும் என கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. விசைத்தறி கூடங்கள், நூற்பாலைகளுக்கு, லாரிகள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் வரும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்ற தடை ஆணை பெறுவதால், அவற்றை அகற்ற முடியாத நிலை நீடித்து வந்தது. நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. பொதுப்பணித்துறை கால்வாய் பாதை, நகராட்சி சாலையை ஆக்கிரமிப்பு செய்த, 40க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகளின் முன்புற பகுதிகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. காலை, 10:00 மணிக்கு தொடங்கி இரவு, 7:00 மணிக்கு மேலும் இப்பணி நீடித்தது. தாசில்தார் தங்கம், டி.எஸ்.பி. அசோக்குமார், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.