நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில், 877 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், 87 கடைகளில், விற்பனையாளர் பணியிடமும், இரண்டு கடைகளில், கட்டுனர் பணியிடமும் காலியாக உள்ளது. அவற்றை நிரப்பும் வகையில், கடந்த, செப்டம்பரில், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏராளமானோர், விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியானவர்களை நேர்காணலுக்கு வரும்படி, 5,884 பேருக்கு, அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம், நேர்காணல் துவங்கியது. நேற்று, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் உள்ளிட்டவை நடந்தன. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் அமுதா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். 'வரும், 9ல் நேர்காணல் முழுமையாக முடிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு பணியிடம் வழங்கப்படும்' என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.