கரூர்: ''கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தமிழ் மொழியில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும்,'' என, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறினார்.
நேற்று காலை, கோவில் நிர்வாகிகளிடம் கோரிக்கை மனு வழங்கிய பிறகு, நிருபர்களிடம் மணியரசன் கூறியதாவது: பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும், 4ல் குடமுழுக்கு விழா நடக்கிறது. தமிழ் மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்து, தமிழில் குடமுழுக்கு விழா நடத்த வேண் டும். தமிழ் மந்திரங்கள் குறித்து, ஏற்கனவே ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழில் பயிற்சி பெற்ற, 230 பேர் உள்ளனர். 2006 முதல் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில், சட்டமும் உள்ளது. சமஸ்கிருதம் அயல்மொழி, அதில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தஞ்சை பெருவுடையார் கோவிலில் குட முழுக்கு விழா நடந்தபோது, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. எனவே, தமிழக முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை, தமிழ் மொழியில் நடத்த அனுமதிக்க வேண்டும். அதை வலியுறுத்தி நாளை (இன்று) கோவில் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.