கரூர்: கரூர் அருகே, வெங்ககல்பட்டி உயர்மட்ட பாலத்தின், இணைப்பு சாலைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர்-திண்டுக்கல் பழைய சாலை, வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் வழியாக, வெள்ளியணை, குஜிலியம்பாறை, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. மேலும், வெள்ளியணை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைக்காகவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்காகவும், உயர்மட்ட பாலம் வழியாக, கரூர் நகருக்கு செல்கின்றனர். ஆனால், உயர்மட்ட பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரத்தில் வழிப்பறிகள் அதிகளவில் நடந்தது. இந்நிலையில், கரூர் சுங்ககேட் முதல், வெங்ககல்பட்டி வரை, சாலையின் நடுப்பகுதியில் உயர்மட்ட மின் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று, அதை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த மாதம் திறந்து வைத்தார். இதையடுத்து, உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதைதொடர்ந்து, தற்போது வெங்ககல்பட்டி உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் உள்ள, இணைப்பு சாலைகளில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரத்தில் உயர்மட்ட பாலம், மின்னொளியில் இருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.