கரூர்: ஆத்துப்பாளையம் தடுப்ணைக்கு, தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு, 210 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 230 கன அடியாக அதிகரித்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.27 அடியாக இருந்தது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 379 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 77.50 அடியாக இருந்தது.
* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,336 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 816 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
மழை இல்லை: வங்க கடலில் எழுந்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கரூர் மற்றும் சுற்று வட் டார பகுதிகளில் வானம் மேக மூட்டமாக இருந்தது. ஆனால் கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டத்தில், மழை பெய்யவில்லை.