கரூர்: நடக்க இயலாத நிலையில், தனியாக வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற, பிரதிநிதியை நியமித்து கொள்ளலாம் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில், நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று, பொருட்கள் வாங்க இயலாதவர்கள் பயன்பெறும் வகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான பிரதிநிதிகளை நியமித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைபாடுடைய நிலையிலோ அல்லது நடக்க இயலாக நிலையிலோ உள்ள முதியவர்கள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுதிறனாளிகள் போன்றவர்கள், தனி நபர்களாக வசிக்கும் பட்சத்தில் மட்டும் தனக்கான ஒரு பிரதிநிதியை நியமனம் செய்து கொள்ளலாம். இதற்கு, சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளில், உரிய அங்கீகார சான்று படிவத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.