கரூர்: தொடர் மழையால், கரூர் மாவட்டத்தில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்து, விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
தமிழகத்தில், மார்ச் முதல் மே வரை நுங்கு சீசன் களை கட்டும். அப்போது, கோடைக்காலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். நுங்குக்கு கடும் கிராக்கி இருக்கும். இந்நிலையில் கடந்த மார்ச், 25 முதல் மே இறுதி வரை, கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், சீசன் காலத்தில் பனை மரத்தில் இருந்து நுங்கை வெட்டி, விற்பனை செய்ய விவசாயிகளால் முடியவில்லை. மரத்தில் நுங்கு பழுத்து, பனை பழமாக மாறி கீழே விழுந்தது. அதன் விதைகளை, பனங்கிழங்காக மாற்ற விவசாயிகள் பூமிக்கடியில் புதைத்து வைத்தனர். கடந்த இரண்டு மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்ததால், பனங்கிழங்கு விளைச்சல் பரவலாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு பனை கிழங்கு மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உடலில் இரும்பு சத்து, நார்ச்சத்துகளை அதிகப்படுத்தும், பனங்கிழங்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.