கரூர்: ''வாக்காளர் பட்டியலில், அ.தி.மு.க.,வினர் தில்லு முல்லு செய்து வருகின்றனர்,'' என, தி.மு.க., கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வு.,மான செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல், நீக்கல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில், பல முறைகேடுகளை ஆளும் கட்சினர் செய்து வருகின்றனர். குறிப்பாக, கரூர் தொகுதியில் ஒரு வாக்காளர் மூன்று வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மூன்று ஓட்டுச்சாவடிகளில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு உள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், ஒரு ஓட்டுச்சாவடியில், 10 போலி வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர், கடந்த, 22, 23ல் நடந்த சிறப்பு முகாம்களில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை, இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் மீது, உடனடியாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு தில்லுமல்லு செய்து, அ.தி.மு.க.,வினர் வெற்றி பெறலாம் என, கனவு காண்கின்றனர். இது குறித்து, கலெக்டர் மலர்விழியிடம் மூன்று முறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய வாக்காளர்கள் என்ற பெயரில், வயது அதிகமானவர்களை பட்டியலில் சேர்த்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.