அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, எட்டியாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில், கொட்டப்பட்டு வரும் கட்டட கான்கிரீட் கழிவுகளால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு உள்ளாகின்றனர். அரவக்குறிச்சி வழியாக செல்லும் கனரக வாகனங்களால், போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜீவா நகர் அருகே, நகரின் பிற பகுதிகளில் இடிக்கப்படும் கட்டட கான்கிரீட் கழிவுகளை கொண்டு வந்து, சாலையின் பக்கவாட்டில் கொட்டுகின்றனர். இதனால், அவ்வழியே இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பாதசாரியாக நடந்து செல்வோரும், எதிர்வரும் வாகனங்களால், சாலை ஓரத்தில் ஒதுங்க வழி இன்றி, கட்டட கழிவுகளில் விழுகின்றனர். இது குறித்து, அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பலன் இல்லை. எனவே, புறவழிச்சாலை பகுதியில் தொடர்ந்து கொட்டப்படும், கான்கிரீட் கழிவுகள் தடுக்கப்பட வேண்டும்.