ஸ்ரீவில்லிபுத்துார்:சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில், அரசுப் பணி பெற்று, ஊருக்கு திரும்பிய பெண், ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த குருநாதன் - சாந்தி தம்பதியின் மகள் மனிஷா ஸ்ரீ, 23; பி.ஏ., ஆங்கிலம் படித்த இவர், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றார். நவ., 30ல் சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, மருத்துவத் துறையில் பணி ஒதுக்கீடு பெற்றார்.நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து பொதிகை சிறப்பு ரயிலில், தந்தை குருநாதன் மற்றும் உறவினருடன் சங்கரன்கோவில் புறப்பட்டார்.
நேற்று காலை, 6:15 மணிக்கு, சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் இடையே, கோப்ப நாயக்கன்பட்டி அருகே ரயில் வரும்போது, கழிப்பறைக்கு சென்ற மனிஷாஸ்ரீ, ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார்.இதை அறியாத குருநாதன், சங்கரன்கோவில் ஸ்டேஷன் வரும்போது மகள் காணாதது குறித்து, ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், மனிஷாஸ்ரீ தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.