கோவை:அதிவேகமாக சென்ற தனியார் பஸ், பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்ததில், முதியவர் பலியானார்.
கோவை, சாய்பாபா காலனி - மதுக்கரை இடையே, தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், நேற்று காலை, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு, புதிய மேம்பாலத்திற்கு கீழ் மதுக்கரைக்கு சென்றது. டிரைவர் ரமேஷ், 32, ஓட்டினார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் ஸ்கூட்டியில் சென்ற, பொள்ளாச்சி, முத்துாரைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 70, என்பவர் மீது மோதியது.
பஸ்சின் முன் சக்கரத்தில் அவர் சிக்கிக் கொண்டார். மோதிய வேகத்தில், இடதுபுறமாக டிரைவர் பஸ்சை திருப்பிய போது, கார் மற்றும் ஒரு பைக்கில் உரசியபடி, பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்தது. பஸ்சுக்குள் சிக்கிய ராஜமாணிக்கத்தை மீட்டபோது, அவர் பலியானது தெரிந்தது. பஸ் டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய டிரைவர் ரமேஷ், பின்னர் கைது செய்யப்பட்டார்.