கோவை : தபால் சேமிப்பு கணக்குகளின் இருப்புத்தொகையை, இன்னும் 10 நாட்களுக்குள் உயர்த்த வேண்டும் என, தபால்நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தபால்நிலைய சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை, கடந்தாண்டு டிச., மாதம் தபால்துறை உயர்த்தியது. இதன்படி, கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை, 50 ரூபாயிலிருந்து, 500 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இருப்புத்தொகையை பராமரிக்கா விட்டால், கணக்கிலிருந்து நுாறு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதன்மூலம், இருப்புத்தொகை, பூஜ்யம் ஆகும் பட்சத்தில், சேமிப்பு கணக்கு தானாகவே செயலிழந்து விடும்.
செயலிழக்கும் கணக்குகள் அதிகரித்தால், தபால்துறையின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், நஷ்டத்திற்கும் வழிவகுக்கும். இதை தவிர்க்க, வரும் 11ம் தேதிக்குள், குறைவான இருப்புத் தொகை கொண்ட கணக்குகளில், 500 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருப்புத்தொகையை உயர்த்த வேண்டும் என, தபால்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, அனைத்து தபால் நிலையங்களிலும் விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.