கோவை:'யுனெஸ்கோ' நடத்திய சர்வதேச அளவிலான காலநிலை மாற்றம் குறித்த 'ஆன்லைன்' மாநாட்டில்பங்கேற்ற கோவை கல்லுாரி மாணவருக்கு, 'கிரீன் பின்' விருது வழங்கப்பட்டது.
மதுரை, அலங்காநல்லுாரை சேர்ந்தவர் யோகபாலாஜி, 19. கோவை, நீலம்பூர், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சி கல்லுாரியில் சிவில் இன்ஜி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் காலநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவை மற்றும் மதுரையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதை கவனித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கிய 'சமாதன்' குழுவில் இவரை இணைத்தது.
இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே கல்லுாரி மாணவர் இவர் தான்.'யுனெஸ்கோ' நடத்திய சர்வதேச அளவிலான காலநிலை மாற்றம் குறித்த ஆன்லைன் மாநாட்டில்இந்தியா சார்பில் மாணவர் யோகபாலாஜி பங்கேற்று பேசினார். இதில் சிறப்பாக பேசிய மாணவருக்கு உயரிய விருதான, 'கிரீன் பின்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர் வழங்கினார்.
மாணவர் யோகபாலாஜி கூறுகையில், ''மாநாட்டில் காலநிலை மாற்றத்தினால் நாம் சந்திக்க உள்ள மிகப்பெரிய பிரச்னைகளையும், அதன் காரணிகள் குறித்தும் விளக்கினேன். இதற்காக உயரிய விருதான கிரீன் பின் விருது கிடைத்துள்ளது. தொடர்ந்து காலநிலை மாற்றத்தை உணர்ந்து நான் படிக்கும் சிவில் துறையில் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.