கோவை:வீரிய வாழை ரகங்களை உற்பத்தி செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும், 'ஹை பை பயோடெக் இந்தியா' நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வாழையில் வீரிய ரகங்கள் உற்பத்தி மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதன் வாயிலாக, 'கோ-2' என்ற வாழை வீரியரகம் நடப்பாண்டு வெளியிடப்பட்டது.இந்த வீரிய ரகம், 'நெய்பூவன்' ரகத்தை போன்ற இயல்பை கொண்டது. நுாற்புழு தாக்கத்தை தாங்கி வளரும்.
தமிழகத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் இந்த வீரிய ரகத்தை பயிரிட, அதிக அளவு திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள் தேவைப்படுகின்றன.அதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும், சேலம் 'ஹை-பை பயோடெக் இந்தியா' இடையே வீரிய ரகங்களின் திசு வளர்ப்பு கன்றுகள் உற்பத்தி செய்ய, வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, 'ஹை-பை பயோடெக்' நிர்வாக இயக்குனர் முருகேசபூபதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் புகழேந்தி, பழ அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் அனீசா ராணி பங்கேற்றனர்.