பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இரு சிறுமியர், இரு சிறுவர்கள் என, நால்வர் மாயமான சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி எல்.ஐ.சி., காலனி 2ல் வசிப்பவர் ரபிக் அகமது; இவரது மகள் ஹசினா பானு, 13, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் என்பவரின் மகள் ஸ்ரீவன் ஸ்ரீ, 11, ஆறாம் வகுப்பும், மகன் ஸ்ரீவனேஸ்வரன், 8, மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். பிரகாஷ் என்பவரின் மகன் தானுமலையான், 8, மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.நேற்றிரவு, குழந்தைகள் நால்வர், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், இவர்களின் பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது, நால்வரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
அருகில் உள்ளவர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகே இருக்கும் பேக்கரி முன் இவர்களை பார்த்ததாக ஒருவர் தெரிவித்ததால், அங்கு பார்த்த போதும், குழந்தைகள் இல்லை.பதட்டமடைந்த பெற்றோர், பொள்ளாச்சி மகாலிங்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து, குழந்தைகளின் புகைப்படத்தை, இங்குள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி, பஸ் ஸ்டாண்ட், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி வருகின்றனர்.குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகள் வழக்கமாக, வெளியில் விளையாடிக் கொண்டிருப்பர்.
வீட்டுக்கு வந்து விடுவர் என்று இருந்தோம். நேரம் கழித்து வரவில்லை என்றவுடன், வந்து பார்த்த போது, காணவில்லை என்பது தெரியவந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை' என்று, வருத்தத்துடன் தெரிவித்தனர்.குழந்தைகள் கடத்தப்பட்டனரா அல்லது வேறெங்கும் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.