கோவை : கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த கல்லுாரி, பல்கலைகள் எட்டு மாதங்கள் கழித்து நேற்று திறக்கப்பட்டன;
அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் பல்கலை, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக முதுகலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லுாரிகளுக்கு செல்லலாம் என, அறிவிக்கப்பட்டது.மாணவர்களின் வருகையை முன்னிட்டு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து கல்லுாரி, பல்கலை வளாகங்களில் பின்பற்றப்பட்டன.
நுழைவுவாயிலில் மாணவர்களின் உடல்நிலை 'தெர்மோ ஸ்கேனர்' மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட அனைவருக்கும் முககவசம் கட்டாயமாகப்பட்டிருந்தது. அதேபோன்று வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவ விடுதிகள், கழிவறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது.
கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'முதுகலை படிப்புகளில் ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக, 25 மாணவர்கள் வரை இருப்பர். இவர்கள் வகுப்பறைகளில் ஒரு பெஞ்சில் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லுாரி வளாகங்களில் அரசு அறிவித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பிரத்யேக குழு அமைக்கப்பட்டு உள்ளது.'தற்போது மாணவர்களுக்கு இரண்டாவது உள்மதிப்பீட்டு தேர்வுகள் நடக்கின்றன. கல்லுாரிக்கு வரும் முதுகலை மாணவர்களுக்கு கல்லுாரியிலேயே நேரடி தேர்வு நடத்தப்படும்.
மற்றாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிச., 7 முதல் இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.