மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி ஆலோசனை நடத்தி முடித்துள்ள நிலையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், நேற்று ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆயத்தமாக, தனி கட்சி துவக்குவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், நடிகர் ரஜினி இருக்கிறார். அரசியல் நிலைப்பாடு குறித்து, என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரும்பான்மையான நிர்வாகிகள், தனி கட்சி துவங்க வேண்டும் என்றே, வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த ரஜினி, விரைவில், தன் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து, நேற்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், ரஜினியை சந்தித்தார். மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களையும், அவர்களிடம் தாம் பேசியதை மட்டும், தமிழருவி மணியனிடம் ரஜினி விளக்கினார். ஆனால், கட்சி துவக்குவது குறித்தோ, கட்சி துவக்க வாய்ப்பு இல்லை என்பது குறித்தோ, எந்த ஒரு வார்த்தையும், ரஜினி சொல்லவில்லை.
இச்சந்திப்பின் போது, தமிழருவி மணியன், 'தமிழகத்திற்கும், தமிழக மக்களின் நலனுக்காகவும், தாங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். விரைவில், கொரோனா தடுப்பு மருந்து வந்து விடும்; நோய் தாக்கம் குறைந்து விடும். உங்களுடைய உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்காத வகையில், கட்சி துவக்குவது குறித்து சிந்தியுங்கள்' என, ரஜினியிடம் கூறியதாக தெரிகிறது.
வெளியில், தமிழருவி மணியன் அளித்த பேட்டி: ஒரு சகோதரனை, இன்னொரு சகோதரன் சந்திப்பது, எப்படி இயல்பானதோ, இயற்கையானதோ, அதேபோல, ரஜினியை சந்தித்தேன். தன் உடல் நிலை குறித்து, அவர் வெளிப்படையாக சொல்லி விட்டார். தன் உடல் நிலை பற்றி, தமிழக மக்களிடம் மறைத்து வாழ வேண்டிய அவசியம், ரஜினிக்கு எள்ளளவும் கிடையாது. அவரது வாழ்க்கை, ஒரு திறந்த புத்தகம்.
தமிழக மக்களின் நலனுக்காக, அவர் என்ன நினைக்கிறாரோ, அதை இதுவரைக்கும் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி, தன் உடல் நலனில் உள்ள பிரச்னைகளையும், அவர் கூறியிருக்கிறார். நான், அவரிடம் என்ன சொன்னேன் என்பதை, வெளியே சொல்ல முடியாது. கட்சி துவக்குவாரா, இல்லையா என்பதை, ரஜினி சொன்னால் தான் தெரியும். நான் எந்த கோரிக்கையும், அவரிடம் வைக்கவில்லை. ரஜினி மீது, எனக்கு அதிக அக்கறை உண்டு என்பதால், 'உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்; அது தான் முக்கியம்' என்று கூறினேன். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -