கடலுார்; 'நிவர்' புயலை தொடர்ந்து அடுத்த புயல் உருவானதால், கடலுார் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் காரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டனர். கடந்த மாதம் 21ம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல், விசைப்படகுகளை, கடலுார் மீன்பிடி துறைமுக பகுதி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.பின்னர் 25ம் தேதி புயல் கரையை கடந்ததும் மீன்பிடிக்க ஆயத்தமாகினர். ஆனால், அடுத்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எச்சரிக்கப்பட்டனர்.தற்போது உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலுார் பகுதியில் திடீர் மழையுடன் காற்று வீசும் என, எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த 12 நாட்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு எடுத்து செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.