கடலுார்: பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மளிகைப்பொருட்களின் தேவையை வட மாநிலங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. வட மாநிலங்களில் விளைச்சல் குறைந்தால் நமக்கு தானிய வகைகளின் வரத்து குறைந்து, மளிகை விலை உயர்வது வழக்கம்.நடப்பு ஆண்டில் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வழக்கமாக வரவேண்டிய மளிகைப் பொருட்களின் வரத்து குறைந்து, தமிழகத்தில் மளிகைப்பொருட்கள் விலை அதிகரித்தது.
மேலும், மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.கடலுார் மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலுாரில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு லிட்டர் ரூ. 75 முதல் ரூ. 80 வரை விற்ற பாமாயில் எண்ணெய் ரூ. 105; ரூ.100க்கு விற்ற தனியார் நிறுவன சமையல் எண்ணெய் ரூ. 130 ; பிற எண்ணெய் வகைகளும் கனிசமாக விலை உயர்ந்துள்ளது
.மேலும், ரூ.90 விற்ற, ஒரு கிலோ துவரம் பருப்பு, தற்போது, ரூ 110க்கும், புளி, ரூ.100ல் இருந்து, ரூ.120க்கும், முதல் ரகம் ரூ. 120ல் இருந்து ரூ. 140க்கும் விற்கிறது. மிளகாய் ரூ. 150ல் இருந்து ரூ. 180, பொட்டுக்கடலை ரூ. 90ல் இருந்து ரூ. 100, பாசி பருப்பு ரூ. 85ல் இருந்து ரூ. 110 உளுந்து ரூ. 100ல் இருந்து ரூ. 120, கடலை பருப்பு ரூ. 80ல் இருந்து ரூ. 90 என, ஒவ்வொரு பொருளின் விலையும் உயர்ந்துள்ளது.'அனைத்து மளிகை பொருட்களின் விலையும் தீபாவளிக்கு முன்பு உயர்ந்து, படிப்படியாக குறைந்து விடும். இந்த ஆண்டு விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து கடலுார் மாவட்ட உணவு பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு செயலாளர் செல்லபாண்டியன் கூறுகையில், வழக்கமாக இந்த சீசனில் மளிகைப்பொருட்கள் வரத்து குறையும். அப்போது 5 முதல் 10 சதவீதம் விலை உயர்வது வழக்கம். இந்த விலை உயர்வு தற்காலிகமானது. ஜனவரி மாதத்தில் சராசரி நிலைக்கு வந்துவிடும். மளிகை பொருட்கள் தட்டுப்பாடு பெரிய அளவில் இல்லை என, தெரிவித்தார்.