புதுச்சேரி; கலித்திரம்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டடம் திறப்பு விழா காணாமலேயே சேதமடைந்து வருகிறது.
கண்டமங்கலம் ஒன்றியம், கலித்திரம்பட்டு கிராமத்தில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2013-14ம் ஆண்டு, 13 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், கிராம சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில், திறக்கப்படாமல் உள்ளது.புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதியை சேர்ந்த சிலர் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் சாதன பொருட்களை சேதப்படுத்தி வருகின்றனர். சமூக விரோதிகள் கட்டடத்தை இரவு நேரங்களில் ஆக்கிரமித்து மது அருந்துவது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கலித்திரம்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.