ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கல்லுாரி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை கலெக்டர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தார். அதையொட்டி நடப்பு கல்வியாண்டு முதல் அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக கலை கல்லுாரி இயங்கி வருகிறது. நிரந்தர கல்லுாரி அமைய பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் பாவந்துார், அரும்பராம்பட்டு, சின்னக்கொள்ளியூர் கிராமங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலி இடங்களை கலெக்டர் கிரண் குராலா நேற்று பார்வையிட்டு, சுற்றுப்புறச் சூழல், பஸ் வசதி, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளுக்கும் ஏற்ற வகையில் இடம் உள்ளதா என ஆய்வு செய்தார்.தொடர்ந்து எடுத்தனுார், மரூர்புதுார் கிராமங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஆய்வு செய்து, வீட்டிற்குள்ளே தண்ணீர் செல்லும் வகையில் பைப் அமைக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் செல்வகணேஷ், ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.