விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சுதாகர் நகர் வழியாக செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்கால், படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த வாய்க்கால், இருந்த இடம் தெரியாமல் நாளடைவில் ஆக்கிரமிப்புகளால் மாயமானது.
இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் சுதாகர் நகர் பிரதான சாலையோரம் உள்ள பொதுப்பணித்துறை வடிகால் வாய்க்கால் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, கடந்த 2018ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது. அப்பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை, ஏற்கனவே அளவீடு செய்து, எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பப்பட்டது
.இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு நவ., 10ம் தேதி பொக்லைன் மூலம் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்திருந்த கட்டட பகுதிகளை இடித்து, அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த இரு கடைகள் அகற்றப்பட்டன. ஒரு கட்டடத்தின் படிகள் இடிக்கப்பட்டன. எதிர்புறம் இருந்த ஒரு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.இதை தொடர்ந்து, சாலையோரம் பள்ளம் தோண்டிய இடத்தில் அளவீடு செய்து, கான்கிரீட் வாய்க்கால் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.
இதேபோல், இந்த சாலையின் வலதுபுறம் ஒரு கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, அதன் பின்புறம் நீர் வரத்து வாய்க்கால் செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் துாரத்திற்கு மட்டும், வாய்க்கால் பள்ளம் தோண்டினர். அதன் பிறகு, எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், மழைக்காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் ஏரிபோல் தேங்கி நிற்கிறது. அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கால், நிவர் புயலின்போது புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால், பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றனர். இந்த நிலை ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் நீடித்து வருகின்றது. இதனால், நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், பயனில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நீர்வழிப்பாதையில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்க மாவட்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.