மாதவரம்; அரசு அலுவலக குடோன்கள் மற்றும் வெளிமாநில சரக்கு லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ள, சி.எம்.டி.ஏ., வாகன நிறுத்த வளாகத்தின் சேதமடைந்த சாலைகளால், கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.சென்னை, மாதவரம், ரவுண்டானா மேம்பாலம் அருகே உள்ள, சென்னை பெருநகர லாரி நிறுத்த வளாகத்தில், 300க்கும் மேற்பட்ட லாரி, 'புக்கிங்' அலுவலகங்கள் உள்ளன.இறக்குமதி கிடங்குகள்மேலும், அரசின் மத்திய சேமிப்பு கழகம், தேசிய சிறுதொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் கிடங்குகள், மின் வாரிய அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், மருத்துவ சிகிச்சைக்கான மருந்து குடோன், வீடற்ற ஆண்கள் தங்கும் மாநகராட்சி விடுதி, ஏற்றுமதி, இறக்குமதி கிடங்குகள் ஆகியவை உள்ளன.மேற்கண்ட அத்தியாவசிய சேவைகளுக்காக, தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, 1,500க்கும் அதிகமான சரக்கு லாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்திற்காக, தினமும் இங்கு வந்து செல்கின்றன.சேதம்மேலும், லாரி ஊழியர்கள் மட்டுமின்றி, பாரம் துாக்குதல் உள்ளிட்ட பிற வேலைகளை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செய்கின்றனர். வளாகத்தில் உள்ள, 10 சாலைகளும், மிக மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளன.அதனால், உள்ளே வரும் வாகனங்கள் நிலைதடுமாறி கவிழ்ந்து, அதில் கொண்டு வரப்படும், விலை உயர்ந்த பொருட்கள் சேதமடைகின்றன. சாலை பள்ளம் மற்றும் காலியாக உள்ள இடங்களில், மழை நீர் மற்றும் கழிவுநீர் குளமாக தேங்கி உள்ளது. சாலை விளக்கு வசதியும் இல்லை.பாதுகாப்பற்ற நிலைகால்வாய்களில், மழைநீருடன், கழிவு நீர் நிரம்பி உள்ளது. அதனால், லாரி ஊழியர்கள் தொற்று நோய் பாதிப்பில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், பல இடங்களில் மின் இணைப்புகள், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.மாதவரம், சென்னை பெருநகர லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு, வணிக ரீதியாக, உரிய வரி செலுத்துகிறோம். ஆனால், எங்களுக்கு சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.கொரோனா ஊரடங்கால், போக்குவரத்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது, சரியான சாலை வசதிகள் இல்லாததால், வெளிமாவட்ட வாகன ஓட்டிகளே, வந்து செல்ல அஞ்சுகின்றனர்.இதனால், அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, பிரச்னைக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.