வேளச்சேரி; பத்து நாட்களாக, தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரானது குடிநீரிலும் கலந்துள்ளதால், வேளச்சேரி பகுதிமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அடையாறு மண்டலம், 177 மற்றும் 178வது வார்டு எல்லையில், வெங்கடேஸ்வரா நகர், பவானி நகர் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இங்குள்ள தெருக்களில், 10 நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது. கழிப்பறையும் நிரம்பி, வீட்டுக்குள் வடிகிறது.நேற்று முன்தினம், கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்திய, காந்தலட்சுமி, 65, சுப்ரமணியன், 70, உள்ளிட்டோருக்கு வாந்திபேதி ஏற்பட்டது. தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், பகுதி முழுதும் துார்நாற்றம் வீசுவதால், வயதானோர் சுவாச பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:இரண்டு வார்டு எல்லையில், நாங்கள் வசிக்கும் தெருக்கள் உள்ளன. கழிவு நீர் வெளியேறுவது ஒரு வார்டு, தேங்கி நிற்பது மற்றொரு வார்டாக இருப்பதால், தீர்வு காண்பதில், இரு வார்டு அதிகாரிகளும் ஒருங்கிணைவதில்லை. கேட்டால், 'அந்த வார்டு அதிகாரியிடம் கூறுங்கள்' என, இரு வார்டு அதிகாரிகளும் மாறி மாறி அலைக்கழிக்கின்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு, கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.