பரமக்குடி : பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து வருகிறது.
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் வகையில் வைகை ஆற்றுப்பாலம் இருந்தது. இப்பாலம் சேதமடைந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிய பாலம் அமைக்கப்பட்டது.அப்போது போக்குவரத்தை மாற்றிவிட தற்காலிக தரைப் பாலம் அமைக்கப்பட்டது. தற்காலிக தரைப்பாலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்த நிலையில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதன் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
இப்பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கவனிப்பாரற்று உள்ளது.எமனேஸ்வரம், வைகை நகர், மஞ்சள் பட்டினம், புது நகர் உள்ளிட்ட ஆறு வார்டுக்குட்பட்ட மக்களின்போக்குவரத்தை கருத்தில் கொண்டு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.