ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே முத்துபேட்டையில் நேற்று பலத்த காற்றில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்தது. தாழ்வான பள்ளிகளில் உள்ள ஆவணங்களை பத்திரப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
புரெவி புயல் இன்று (டிச.,3ல் ) ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்துக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து, குளிர்ச்சியான காற்றும் வீசியது. உச்சிப்புளி அருகேயுள்ள முத்துப்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் ஓட்டு மேற்கூரையானது பலத்த காற்றால் விழுந்தது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இடிபாடுகளை அகற்ற உத்தரவிட்டார். புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, வேர்க்கோடு, பாம்பன் ஆகிய இடங்களிலுள்ள தொடக்கபள்ளிகளில் ஆவணங்கள்அனைத்தும் வேறுபள்ளிக்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.தாழ்வான பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலுமுள்ள ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.