சேலம்: சென்னை, கோவையை தொடர்ந்து, சேலத்திலும், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, கேமரா மூலம் அபராதம் விதிப்பு திட்டம், நாளை முதல் அமலாகிறது.
சென்னை, கோவையில், முக்கிய சந்திப்புகளில், ஏ.எம்.ஆர்., கேமரா பொருத்தப்பட்டு, அதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை, சேலம், ஐந்து ரோட்டில் அமல்படுத்த, 24 கேமராக்கள் பொருத்தி, அதன் பதிவை சேமிக்க ஏழு என, 31 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள், ஒரு மணி நேரத்துக்கு, விதிமீறும், 3,000 வாகனங்களை கண்டறிந்து, அபராதம் விதிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 15 நாளாக சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நாளை முதல், இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதனால், ஐந்து ரோடு வழியாக, சாலை விதிமீறி இயங்கும் வாகன உரிமையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சாலை விதிகளை மீறும் வாகனங்கள், அவற்றை ஓட்டுவோர் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களது மொபைல் எண், மின்னஞ்சல், வீட்டு முகவரிக்கு அபராத நோட்டீஸ் சென்றடையும். அபராதம் செலுத்த தவறினால், அதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இதன்மூலம், போலீசில் தடையில்லா சான்றிதழ் பெற்று கொடுக்க வேண்டும். இல்லையெனில், தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ் புதுப்பிப்பு நிறுத்தி வைக்கப்படுவதோடு, உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.