கோவை : கோவையில், தனியார் பஸ், பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், ஒரு முதியவர் பலியானார்.
கோவை, சாய்பாபாகாலனி - மதுக்கரைக்கு, தனியார் பஸ் தடம் எண்: 3பி இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று காலை, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு, புதிய மேம்பாலத்திற்கு கீழ் மதுக்கரைக்கு சென்றது.சூலுார், பட்டணத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ், 32, பஸ்சை வேகமாக ஓட்டினார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் ஸ்கூட்டியில் சென்ற, பொள்ளாச்சி, முத்துாரை சேர்ந்த ராஜமாணிக்கம்,70, என்பவர் மீது மோதியது. பஸ்சின் முன் சக்கரத்தில் அவர் சிக்கிகொண்டார்.
மோதிய வேகத்தில், இடதுபுறமாக டிரைவர் பஸ்சை திருப்பிய போது, கார் மற்றும் ஒரு பைக்கில்உரசிய படி பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்தது. பஸ்சுக்குள் சிக்கிய ராஜமாணிக்கத்தை மீட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிந்தது.விபத்து ஏற்பட்ட இடத்தில், பொதுமக்கள் திரண்டனர். பஸ் டிரைவரும், நடத்துனரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். தப்பிய ஓடிய டிரைவர் ரமேஷ், பின்னர் கைது செய்யப்பட்டார்.
பெரும் ஆபத்து தவிர்ப்பு:
கட்டுப்பாடு மீறி பங்கிற்குள் புகுந்த பஸ், பெட்ரோல் போடும் பம்பு மீது மோதியபடி நின்றது. நிற்காமல் தொடர்ந்து சென்றிருந்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக, பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
'லைெசன்ஸ் முடக்கம்'
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ''சூலுாரை சேர்ந்தபஸ் டிரைவர் ரமேஷ், அஜாக்கிரதையாக பொதுமக்கள் பயணிக்கும் பஸ்சை இயக்கியுள்ளார். உயிர் இழப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதோடு, கவனக்குறைவாக செயல்பட்டதால், போக்குவரத்து நடைமுறை சட்டங்களின்படி அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மோட்டார் வாகன லைெசன்ஸ் முடக்கப்படும்,'' என்றார்.