துாத்துக்குடி:'புரெவி' புயல் காரணமாக, ராமேஸ்வரம், நாகையில் பலத்த சூறாவளி காற்றுடன், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுகள் கரையில் மோதி, சேதம் அடைந்தன.
'புரெவி' புயலால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், நடந்த ஆய்வு கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், செய்தி துறை அமைச்சர் ராஜு, புயல் கண்காணிப்பு சிறப்பு போலீஸ் அதிகாரி சாரங்கன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:துாத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான, 36 இடங்களையும், கடற்கரை பகுதி மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளில் உபரி நீர் வெளியேற்ற, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி விட்டனர். தென் மாவட்டங்களில், 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 82 பேர் தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புயல், இன்று இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை. முகாம்கள்தயாராக இருக்கின்றன. இயற்கையை கையாளுவதில் முதல்வர் புதிய இலக்கியம் படைத்து வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்திலும், தொடர்ந்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும், அமைச்சர்கள் புயல் முன்னெச்சரிக்கை குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ராமேஸ்வரத்தில் சூறாவளி
நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, புரெவி புயல், மன்னார் வளைகுடா கடலில் மையம் கொண்டிருந்தது. இதனால், நேற்று, 45 முதல், 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்தன. பாம்பன் குந்துகால், சின்னபாலம் கடற்கரையில் ராமேஸ்வரம் மீனவர்கள், 200க்கும் மேலான விசைப் படகுகளை நிறுத்தி இருந்தனர். சூறாவளி காற்றில், பல படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில், 15 படகுகள் சேதமடைந்து, கரை ஒதுங்கின.
தொடர் மழையால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும் பாம்பன் சின்னபாலம், தரவைதோப்பு, தெற்குவாடி உள்ளிட்ட சில மீனவ கிராமத்தில் மழை நீர் வீடுகளை சூழ்ந்ததால், மீனவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், 197 நிவாரண முகாம்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக நேற்று கடற்கரையோர கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த, 5,777 பேர் 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நாகையில் கடல் சீற்றம்நாகை மாவட்டத்தில், மூன்று தினங்களாக விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.கடல் அலைகள், வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷத்துடன், 5 அடி உயரத்திற்கு சீறிப் பாய்ந்தன. கடலோரப் பகுதி மீனவ கிராமங்களில், கடல் நீர் புகுந்துள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தொடர் மழை, கடல் சீற்றம் காரணமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நான்காவது நாளாக வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கடலுார் மாவட்டத்திலும், 3 மீட்டர் உயரம் வரையில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன.
மழை வெள்ளம் சூழ்ந்தது
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து, கன மழை பெய்து வருகிறது. இதனால், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, நேற்று மாலை வெள்ளம் சூழ்ந்தது.