ஓசூர்:காரில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரியை அதிகாலையில் விடுவித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் பீட்டர் லுாயிஸ் 44; ஓசூர் சிப்காட்டில் 'ஏசியன் டுபாக்கோ' நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பணியை முடித்து காரில் வீட்டுக்கு சென்றவரை நடுவழியில் நான்கு பேர் கத்தி முனையில் காருடன் கடத்திச் சென்றனர். அவரது மனைவி புகாரின்படி சிப்காட் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் காருடன் அவரை விட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது. பீட்டர் லுாயிசை போலீசார் மீட்டனர். விசாரணையில் அவரிடம் பணம் கேட்டு கும்பல் மிரட்டியதாகவும் போலீசார் நெருங்குவதை அறிந்ததும் அவரை இறக்கி விட்டு தப்பி சென்றதும் தெரிந்தது.