பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த, நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கிறது. ஆள் இறங்கும் குழிகள், குழாய் பதித்தல், கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் என எந்த பணியும் முழுமை பெறாமல் உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி கதிரவன் நகர் செல்லும் ரோடு, சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள், சீரமைக்கப்படாமல் இருப்பதால், விபத்துகளை ஏற்படுத்தும் பகுதியாக மாறியுள்ளது. கதிரவன் நகர் ரோடு முறையாக சீரமைக்காமல் இருப்பதால், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரோடு சேறும், சகதியுமாக மாறியுள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால், குழி இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க பல முறை வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லாததால் விபத்துக்கு வழி வகுக்கிறது. இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.