கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று நடந்தது.கிணத்துக்கடவு முதல் கோதவாடி பிரிவு வரை, நான்கு வழிச்சாலை பணியில் சர்வீஸ் ரோடு பணி நடக்கிறது. இதில், சாலைப்புதுார் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் ஒரு பகுதியும், கல்லாங்காட்டுப்புதுார் முதல் காலனி ரோடு வரையும் சர்வீஸ் ரோடு பணி நிலுவையில் உள்ளது.இதில், கல்லாங்காட்டுப்புதுார் பகுதியில் மாரியம்மன் கோவில் முன்பக்கம் கிணறு உள்ளதாலும், நில எடுப்பு பணி நிலுவையில் உள்ளதாலும், சர்வீஸ் ரோடு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இப்பகுதியை தவிர்த்து, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் கோதவாடி பிரிவு வரை சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. இதில், மேற்கு பகுதி சர்வீஸ் ரோட்டில் பேரூராட்சி பூங்கா அமைந்துள்ள இடத்தில் இருந்து, கோதவாடி பிரிவு வரையுள்ள சர்வீஸ் ரோட்டில், 100 மீட்டர் துாரத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிலுவையில் இருந்தது.அங்கு, குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடக்கிறது. அதற்காக குழி தோண்டப்பட்டு, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாயுடன் இணைக்க, புதிதாக குழாய் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதேபோல், விடுப்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவங்கவுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றவும், சர்வீஸ் ரோடு பணி முழுமை பெறும்.