ராமேஸ்வரம்:புரெவி புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறாவளி, கடல் கொந்தளிப்பால் 15 படகுகள் சேதமடைந்தன. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புயல்
வங்கக்கடலில் உருவானபுரெவி புயலால் 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அரிச்சல்முனையில் புறக்காவல் நிலையமாக செயல்படும் சிவன் கோயில் முற்றிலும் சேதமடைந்து சாய்ந்தது. ராமேஸ்வரம், பாம்பன்,தங்கச்சிமடம் பகுதியில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடின.தொடர் மழைநேற்று பகல் முழுவதும் மழை பெய்ததால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.
மேலும் பாம்பன் சின்னபாலம், தரவைதோப்பு, தெற்குவாடி உள்ளிட்ட சில மீனவ கிராமத்தில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் மீனவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.வடகிழக்கில் இருந்து வீசும் சூறாவளி பீதியால் பாம்பன் பாலத்தை கடந்து குந்துகால், சின்னபாலம் கடற்கரையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 200க்கும் மேலான விசைப்படகுகளை நிறுத்தினர். காற்றால்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 15 படகுகள் சேதமடைந்தன.சேதமடைந்த படகிற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார்.
முகாம்களில் 5777 பேர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக்கட்டடங்கள் உள்ளன. 197 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக நேற்று கடற்கரையோர கிராமங்கள் மற்றும்தாழ்வான பகுதிகளில் வசித்த 2024 ஆண்கள், 2581 பெண்கள், 1172 குழந்தைகள் என 5777 பேர் 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தேசிய, மாநில பேரிடர் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ரயில் சேவை பாதிப்பு
சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ராமநாதபுரத்திலேயே நிறுத்தப்பட்டது.காற்றின் வேகம் அதிகரித்தால் ராமேஸ்வரம் செல்ல வில்லை. பயணிகள் மூன்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் ராமநாதபுரத்தில் இருந்தே சென்னைக்கு இந்த ரயில் நேற்று இரவு 9:25க்கு புறப்பட்டு சென்றது.மைசூர், சென்னையில்இருந்து துாத்துக்குடி சென்ற ரயில்கள் நேற்று காலை மதுரையுடன் நிறுத்தப் பட்டன. இரவு மீண்டும் மதுரையில் இருந்து புறப்பட்டுசென்றன.
மீனவர் பலி
ராமேஸ்வரம் காந்தி நகர் வரதராஜ் மகன் விஜயராஜ் 28. மீனவரான இவர் நேற்று முன்தினம் புயலில் இருந்து விசைப்படகை பாதுகாப்பாக நிறுத்த சென்றார். அப்போது கடலில் தவறி விழுந்து ராட்சத அலையில் சிக்கி பலியானார். நேற்று ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் உடல் ஒதுங்கியது. மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கிறார்கள்.--
மீனவர்கள் மீட்பு
நவ.,29ல் நாட்டுபடகில் மீன்பிடிக்க சென்ற பாம்பன் சின்னபாலத்தை சேர்ந்த பொங்கவள்ளி 35, உறவினர்களான சங்கர் 30, சரவணன் 18 ஆகியோர் படகு இயந்திர பழுதால் மனோலி தீவில் தஞ்சமடைந்தனர். 4 நாட்களாக குடிநீர், உணவு இன்றி வாடினர். மண்டபம் வனத்துறை அலுவலர் வெங்கடேஷ், மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் ஆகியோர் வலியுறுத்தலில் இந்திய கடலோர காவல் படையினர் மூவரையும் மீட்டனர்.