மேட்டுப்பாளையம்:குடிநீர் குழாய் பதித்து சேதமடைந்த செல்லப்பனுார் சாலையை சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட, புதிய குழாய் பதிக்கும் பணிகள், மருதுார் ஊராட்சியில் நடைபெறுகின்றன. மிகவும் குறுகலாக உள்ள செல்லப்பனுார் சாலையில், குடிநீர் குழாய் பதிக்கும் போது, சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த சாலையை சீரமைத்து, தார் சாலையாக மாற்றும் படி, செல்லப்பனுார் விவசாயிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறுகையில், 'கெம்பனுார், மாதனுார், செல்லப்பனுார் ஆகிய ஊர்களுக்கு, செல்லப்பனுார் சாலை வழியாக செல்ல வேண்டும். கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் போது, செல்லப்பனுார் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரும் படி, குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் விஜயலட்சுமி மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஒ., சைலஜா விடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.